செய்திகள்
கோப்புபடம்

பெண் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2021-10-13 07:48 GMT   |   Update On 2021-10-13 07:48 GMT
ஜனவரி 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் மாநில விருது வழங்கிட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திருப்பூர்:

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் வீரதீர செயல்புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள் விருதுக்கு  வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும்18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர்முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்புரியும் 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளை  சிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் மாநில விருது வழங்கிட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைத் திருமணத்தை தடுத்தல், தற்காப்பு கலையில் மாநில அளவில் சான்றுகள் பெற்றிருத்தல், சமூக அவலங்களைத் தீர்வு காண்பதற்கு புத்தகங்கள் மற்றும் கையேடுகள் எழுதி வெளியிட்டிருத்தல் போன்றவற்றில் சிறப்புடன் செயல்பட்ட 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உள்பட்ட தகுதியான பெண் குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கு தமிழகத்தை சார்ந்தவர்கள் பெயர், முகவரி, புகைப்படம், ஆதார்எண், சாதனைகளின் சான்று ஆகியவற்றுடன் ஒரு பக்கத்துக்கும் மிகாத ஆதாரங்களுடன் முன்மொழிவு படிவத்தை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் 30-ந்தேதிக்குள் சமர்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News