செய்திகள்
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும் -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

Published On 2020-10-25 09:17 GMT   |   Update On 2020-10-25 09:17 GMT
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 

மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனாலும், ஆளுநர் இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். இதனால் மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும் என்றும், இனியும் காலதாமதம் ஏற்படாமல் மாணவர்களின் நலன் கருதி மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் வரும் செவ்வாய்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடைபெறும் என்றும், தமிழகத்தில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை நடைபெறும் எனவும் எல்.முருகன் கூறினார்.

Tags:    

Similar News