செய்திகள்
கோப்பு படம்.

கொரோனா ஊரடங்கு அச்சம்- திருப்பூரில் உற்பத்தியை குறைத்த பின்னலாடை நிறுவனங்கள்

Published On 2021-04-06 11:16 GMT   |   Update On 2021-04-06 11:16 GMT
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மீண்டும் ஊரடங்கு போடப்படும் என்ற அச்சம் தொழில்துறையினரிடையே ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது நிதி நிலைக்கு ஏற்ற வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடு என வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 2020ம்ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு மேல் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு 50 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு, நிறுவனங்கள் இயங்கின.

இதன் பின்னர் கொரோனா தொற்று குறைந்ததும் 100 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. ஊரடங்கால் பின்னலாடை துறையினர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

தற்போது பின்னலாடை தொழில் மீண்டு ஓரளவிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது பின்னலாடை தொழில் துறையினரை கவலையடைய செய்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது அதற்கு முன்னதாக எடுத்து வைத்த ஆர்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆர்டர்களுக்காக தொழில் துறையினர் தயாரித்து வைத்த ஆடைகளையும் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆடை தயாரிப்பாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், மீண்டும் கொரோனா தடுப்பு ஊரடங்கு போடப்படும் என்ற அச்சம் தொழில்துறையினரிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய ஆர்டர்களை எடுக்க சிலர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

சில நிறுவனங்கள் உற்பத்தியையும் குறைத்துள்ளன. அதிக அளவில் ஆடைகளை தயாரித்து வைக்கும் பட்சத்தில்,ஊரடங்கு விதிக்கப்பட்டால் தேக்கமடைந்து விடும் என்பதால் ஒரு சில நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்க தொடங்கியுள்ளன.

Tags:    

Similar News