செய்திகள்
மன்மோகன் சிங்

சாதாரணமான மனிதராக வந்தாலும் மன்மோகன் சிங்கை வரவேற்போம் - பாகிஸ்தான் மந்திரி

Published On 2019-10-19 13:18 GMT   |   Update On 2019-10-19 13:18 GMT
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சாதாரணமான மனிதராக பக்தர்கள் குழுவுடன் வரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்போம் என பாகிஸ்தான் மந்திரி தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு சாதாரணமான மனிதராக பக்தர்கள் குழுவுடன் வரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்போம் என பாகிஸ்தான் மந்திரி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.

அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.
 
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத் தயார் என்று பாகிஸ்தான் அறிவித்திருந்தது. அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கர்தார்பூர் பாதை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க வருமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு அனுப்பியது. ஆனால், அந்த அழைப்பை நிராகரித்துவிட்ட மன்மோகன் சிங், குருநானக் தேவ் 550-வது பிறந்தநாளையொட்டி பக்தர்களோடு பக்தராக ஆலயத்துக்கு நான் வருவேன் என்று தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், எங்கள் நாட்டில் உள்ள  சீக்கிய குருத்வாராவுக்கு பக்தர்கள் குழுவுடன்  சாதாரணமான மனிதராக வந்தாலும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நாங்கள் வரவேற்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி
தெரிவித்துள்ளார்.

திறப்பு விழாவுக்கு வருமாறு அவருக்கு நாங்கள் அழைப்பு அனுப்பினோம். அவர் எனக்கு அனுப்பிய கடிதத்தில் பக்தர்கள் குழுவுடன் நான் வருவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரணமான மனிதராக வந்தாலும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நாங்கள் வரவேற்போம் என ஷா மெஹ்மூத் குரைஷி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஹ் என்ற சிற்றூரில் பிறந்தவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News