செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க முதல்-அமைச்சருக்கு அழைப்பு: அமைச்சர் உதயகுமார்

Published On 2020-01-10 09:43 GMT   |   Update On 2020-01-10 12:29 GMT
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதல்வர் வருகை தரும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பரிசீலனை செய்து பின்னர் அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டர் வினய் தலைமையில் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா மதுரை செக்காணூரணி பகுதியில் நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார். அவர் கூறியதாவது:-

தூங்குபவர்களை தட்டி எழுப்பலாம், தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப இயலாது. சட்டசபையில் முதல்வர் தெளிவாக கூறியுள்ளார். 30 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு எவ்வாறு சிறுபான்மையினர் பாதுகாப்பு அரணாக இயங்கியதோ, அதனைப் போன்றே தற்போது முதல்வர் தலைமையில் வருகிற காலங்களிலும் சிறுபான்மையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு அரணாக முதல்வர் இருப்பார் என்று தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

கடந்த 2003-ல் வாஜ்பாய் ஆட்சியில் தி.மு.க. கூட்டணியாக இருந்தபோது குடியுரிமை திருத்தம் வருகிறபோது அன்றைக்கு ஆதரவளித்தவர்கள், இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிப்பதை சிறுபான்மையின மக்கள் நம்பமாட்டார்கள்.

இன்றைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வரை 21-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் நேரில் சந்தித்து முதல்வருக்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்கள்.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதல்வர் வருகை தரும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் பரிசீலனை செய்து பின்னர் அறிவிப்பார். இந்த முறையும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதல்வர் பெயரிலும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு துணை முதல்வர் பெயரிலும் கார்கள் பரிசாக வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கரும்பு கொள்முதல் விலை என்பது நிர்வாகத்தின் காரணங்கள், எங்கு விலை எங்கு குறைவாக கிடைக்கிறதோ அங்கு வாங்கி மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

விவசாயிகளிடம் விலை குறைத்து வாங்குவது நோக்கமல்ல, விலை குறைவாக கிடைக்கும் இடத்தில் வாங்கி மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம். குறிப்பாக அரசாங்கத்தினுடைய பணத்தைக் காட்டிலும் மக்களுடைய பணம். ஆகையால் ஆய்வு செய்து எங்கு விலை குறைவாக இருக்கிறதோ அங்கு கரும்பு வாங்குவது தான் நிர்வாகத்தின் முடிவு.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வினய் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மாவட்டத் துணைச் செயலாளர் அய்யப்பன் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தமிழக முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன் மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் தமிழ்செல்வம் இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News