செய்திகள்
கோப்பு படம்

போதையில் வாக்கி-டாக்கியை தவற விட்ட போலீஸ்- அதிரடி நடவடிக்கை பாய்ந்தது

Published On 2021-09-28 10:09 GMT   |   Update On 2021-09-28 15:08 GMT
போலீஸ்காரர் அன்பழகன் அஜாக்கிரதையாக செயல்பட்டதோடு, பணியின் போது மது அருந்தியது தொடர்பாக அவர் பணியாற்றி வரும் போலீஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இவர் தனது வாக்கி- டாக்கியுடன் கடந்த 24-ந்தேதி இரவு கீரனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு ரோந்துப்பணி சென்றார்.

இதற்கிடையே அவர் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணல் கடத்தும் தொழிலில் ஈடுபட்ட இன்பசுரேஷ் என்பவருக்கும், போலீஸ்காரர் அன்பழகனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில் அன்பழகனை இன்பசுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் முகேஷ், சீனிவாசன், செந்தில் ஆகிய 4 பேரும் அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளனர்.

போதை தலைக்கேறிய நிலையில் அன்பழகன் வைத்திருந்த வாக்கி-டாக்கி தவறி கீழே விழுந்துள்ளது. அதனை எடுத்துக்கொண்ட மணல் திருடர்கள் 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். போதை தெளிந்த போலீஸ்காரர் அன்பழகனுக்கு அப்போதுதான் தனது வாக்கி- டாக்கி மாயமானது குறித்து தெரியவந்தது.

பின்னர் அவர் இதுபற்றி கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அன்பழகனுக்கு மது வாங்கி கொடுத்த 4 பேரும் சேர்ந்து வாக்கி-டாக்கியை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். அதன்பேரில் வாக்கி- டாக்கியை திருடிய இன்ப சுரேஷ் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் வாக்கி-டாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சமரசம் பேச சென்ற போலீஸ்காரர் அன்பழகன் அஜாக்கிரதையாக செயல்பட்டதோடு, பணியின் போது மது அருந்தியது தொடர்பாக அவர் பணியாற்றி வரும் போலீஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் தீவிர விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், போதையில் வாக்கி- டாக்கியை தவற விட்ட போலீஸ்காரர் அன்பழகனை இன்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்... 165 ஆண்டு கால வரலாற்று பெட்டகமாக எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகம்

Tags:    

Similar News