செய்திகள்
கோப்புபடம்

சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இ-பதிவு இணைய தளம் முடங்கியது

Published On 2021-06-07 06:46 GMT   |   Update On 2021-06-07 06:46 GMT
இணைய தளம் முடங்கியதால் சுயதொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இருந்தும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

சென்னை:

தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 27 மாவட்டங்களில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்த மாவட்டங்களில் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் வீட்டு வேலைகள் செய்யும் பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எலக்ட்ரிசியன், பிளம்பர்கள், கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்களை பழுது பார்ப்பவர்கள், தச்சு தொழிலாளிகள் ஆகியோரும் பணி புரிய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால் இவர்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கும் இ.பதிவு செய்துவிட்டுதான் பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக https://eregister.tnega.org// என்ற இணைய முகவரி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த இணைய தளத்தில் இன்று காலையில் ஒருசிலர் விண்ணப்பித்து இ-பதிவுகளை பெற்றனர்.

நேரம் செல்ல செல்ல ஒரே நேரத்தில் அதிகம் பேர் இ-பதிவுக்காக விண்ணப்பித்தனர். கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வேலை எதுவும் இன்றி வீடுகளில் தவித்த எலக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சு தொழிலாளிகள் உள்ளிட்டவர்கள் தங்களது செல்போனில் இ-பதிவுக்காக விண்ணப்பம் செய்தனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இ-பதிவு பெறுவதற்கு முயற்சி செய்ததால் தடங்கல் ஏற்பட்டது. இ-பதிவு இணைய தளம் திடீரென முடங்கியது.

காலை 9.30 மணியளவில் இருந்து அது செயல்படவில்லை. இதனால் சுயதொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இருந்தும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

ஒருசிலர் இ-பதிவு பற்றி கவலைப்படாமல் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறுக்கு வழிகளை தேடி சென்று அடைந்தனர்.

இ-பதிவு முறை காரணமாக சிறிய தொழிலாளர்கள் பலர் ஊரடங்கில் தளர்வு அளித்து இருந்த நிலையிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் பலருக்கு செல்போனில் இ-பதிவுக்காக விண்ணப்பிக்க தெரியாத நிலையும் உள்ளது.

எனவே தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் மாற்று வழிகளை கண்டறிந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News