ஆன்மிகம்
ஹயக்கிரீவர் சன்னதியில் நடைபெற்ற சாற்றுமுறை முடிந்து தேசிகர் வெளியே வந்த காட்சி.

பிரம்மோற்சவத்தையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகருக்கு ரத்னாங்கி சேவை

Published On 2019-10-09 04:40 GMT   |   Update On 2019-10-09 04:40 GMT
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவத்தையொட்டி தேசிகருக்கு ரத்னாங்கி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூரை அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில், தேசிகர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. தேசிகருக்கு ஆண்டுதோறும் 12 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் தேசிகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரத்தில் தங்க விமானம், சூரிய பிரபை, யாழி, சந்திர பிரபை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேசிகர் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருவோண நட்சத்திரமான நேற்று தேசிகர் ரத்னாங்கி சேவை, அவுஷதகிரி மலையில் உள்ள ஹயக்கிரீவர் சன்னதியில் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி தேசிகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக ஹயக்கிரீவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு சாற்றுமுறை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், ராமன், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் உள்ளிட்ட பல்வேறு சாமி சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் மாலையில் கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News