செய்திகள்
கைது

மறைமலைநகர் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.1½ கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்- 7 பேர் கைது

Published On 2021-09-28 11:38 GMT   |   Update On 2021-09-28 11:38 GMT
மறைமலைநகர் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.1½ கோடி மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள காட்டூர் ரெயில் நகர் பகுதியில் தனியாக ஒரு வீட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசார் மற்றும் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று காலை போலீசார் சந்தேகத்துக்குரிய அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தபோது, அங்கு மூட்டை மூட்டையாகவும், பெட்டி பெட்டியாக வீடு முழுவதும் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (வயது 30), அருங்குன்றம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (25), சாலவாக்கம் பகுதியை சேர்ந்த காசி (19), பெங்களூரூவை சேர்ந்த ஆனந்த் (35), நரேஷ் குமார் (20), தமுரா ராம் (22), மகேஷ் (25), ஆகிய 7 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதனையடுத்து குடோனில் பெட்டி பெட்டியாக மற்றும் மூட்டை மூட்டையாக இருந்த 5 டன் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு மினி லாரி, 2 மினி ஆட்டோ, கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 9 வாகனங்கள், 9 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 1½ கோடி என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே இதேபோல ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News