வழிபாடு
சோழவந்தான் வைகை ஆற்றில் அய்யப்பசாமிக்கு அபிஷேகம் நடந்தபோது எடுத்தபடம்.

சோழவந்தான், தென்கரை வைகையாற்றில் ஐயப்பசாமிக்கு ஆராட்டு விழா

Published On 2021-12-09 03:48 GMT   |   Update On 2021-12-09 03:48 GMT
சோழவந்தான், தென்கரை வைகையாற்றில் ஐயப்பசாமிக்கு பால், தயிர் உட்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன. நெய் அபிஷேகமும், புனிதநீரால் மகாஅபிஷேகமும் நடைபெற்றது.
சோழவந்தான் மற்றும் தென்கரை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நடந்தது. இங்கு வருடந்தோறும் ஆராட்டு விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று அதிகாலை தென்கரை ஐயப்பன் கோவிலில் கண்ணன் பட்டர் மற்றும் பிரசாந்த் சர்மா தலைமையில் யாகபூஜை நடந்தது.

தொடர்ந்து யானை மீது ஐயப்பசாமி அலங்கரித்து ஐயப்ப பக்தர்கள் பக்திபாடல்கள் பாடிஆடி வந்தனர். தொடர்ந்து ஐயப்பசாமிக்கு பால்,தயிர் உட்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன. நெய் அபிஷேகமும், புனிதநீரால் மகாஅபிஷேகமும் நடைபெற்றது.

வைகை ஆற்றில் உள்ள தண்ணீரில் ஐயப்பசாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. பின்னர் ஐயப்ப சாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. மீண்டும் யானை மீது ஐயப்ப சாமி வலம் வந்து கோவிலை அடைந்தார். இங்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தென்கரை பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தென்கரை ஐயப்பன் கோவில் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோல் சோழவந்தான் ஐயப்பன் கோவில் சண்முக வேல் அர்ச்சகர் தலைமையில் யாகபூஜை நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து ஐயப்பசாமி யானைமீது அமர்ந்து கோவிலில் இருந்து மாரியம்மன் சன்னதி, கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி வழியாக வைகை ஆற்றுக்கு சென்று அங்கு ஐயப்பனுக்கு பால், தயிர் உள்பட 12 அபிஷேகம் மற்றும் நெய்யபிஷேகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து புனிதநீரால் மகாஅபிஷேகம் நடந்தது. பின்னர் வைகையாற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. ஐயப்பன் அலங்கரிக்கப்பட்டு யானை மீது அமர்ந்து பக்தர்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடி, ஆடி வந்தனர். இதில் ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News