செய்திகள்
மரக்காணம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

Published On 2021-01-13 17:33 GMT   |   Update On 2021-01-13 17:33 GMT
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:

இந்திய கப்பல் படையின் சார்பில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டு இந்த ஒத்திகை நேற்று தொடங்கியது. இந்த பாதுகாப்பு ஒத்திகை விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளான மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இந்த ஒத்திகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் போலீசார் பலர் ஈடுபட்டனர்.

இவர்கள் விழுப்புரம் மாவட்டம் வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனை செய்த பிறகே செல்ல அனுமதித்தனர்.

அதேபோல் படகில் சென்றவாறு கடலோர பகுதிகளின் வழியாக தீவிரவாதிகள் யாரேனும் வருகிறார்களா? என்று தொலைநோக்கு கருவி மூலம் தீவிரமாக கண்காணித்தனர். இவர்களுடன் கடலோர பாதுகாப்பு படையினரும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும் கடலோர கிராமங்களான கூனிமேடு, அனுமந்தை் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் போலீசார் சாதாரண உடையில் சென்றவாறு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதோடு கடற்கரையோரம் யாரேனும் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் உடனே அவர்களை பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News