செய்திகள்
சிரக் பஸ்வான்

நிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு

Published On 2020-10-21 08:12 GMT   |   Update On 2020-10-21 08:12 GMT
பீகாரில் தற்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் தேர்தலில் தவறுதலாக வெற்றி பெற்றால், மாநிலத்தின் தோல்வியாக அமையும் என சிரக் பஸ்வான் குறிப்பிட்டார்.
பாட்னா:

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சிரக் பஸ்வான் இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போதைய முதலமைச்சர் (நிதிஷ் குமார்) மீண்டும் இந்தத் தேர்தலில் தவறுதலாக வெற்றி பெற்றால், அது மாநிலத்தின் தோல்வியாக அமையும். மாநிலம் மீண்டும் அழிவின் விளிம்பிற்கு செல்லும். அவர் (நிதிஷ் குமார்) எவ்வாறு வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நபரின் தலைமையில் பீகார் மாநிலம் வளர்ச்சி பெறுமா? என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையானது 'பீகாருக்கு முதலிடம், பீகார் மக்களுக்கு முதலிடம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. பீகார் மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய லோக் ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை எதிர்த்து தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதேசமயம் பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News