செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருவாரூர் அருகே காட்டூரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி- பொதுமக்கள் பாராட்டு

Published On 2021-06-25 07:43 GMT   |   Update On 2021-06-25 07:43 GMT
காட்டூர் ஊராட்சியில் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்த சுகாதார ஊழியர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் அனைவரையும் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
திருவாரூர்:

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. தமிழகத்தில் ஊராட்சி தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதார ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஊராட்சியில் கடந்த 10 தினங்களாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த முகாமில் காட்டூரை சுற்றியுள்ள ஊராட்சிகளில் இருந்து மக்கள் திரண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒரு நாளைக்கு 500 பேர் வீதம் இந்த முகாமில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

அந்தவகையில் காட்டூர் ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற கணக்கின்படி 2,344 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. அதன் மூலம் தமிழகத்திலேயே ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்ட ஊராட்சியாக காட்டூர் ஊராட்சி திகழ்கிறது.

இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனடிப்படையில் காட்டூர் ஊராட்சியில் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்த சுகாதார ஊழியர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் அனைவரையும் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News