செய்திகள்

தாஜ் மஹாலில் தென் கொரியா அதிபரின் மனைவி

Published On 2018-11-07 10:54 GMT   |   Update On 2018-11-07 10:54 GMT
இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று ஆக்ரா நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை கண்டு களித்தார். #KimJungSook #TajMahal ##KimJungSookinTajMahal
லக்னோ:

இந்தியாவில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசிய பின்னர், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.

அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டுவாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். வரலாற்று குறிப்புகளில் அவரது பெயர் ஹூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரலாறை நினைவுகூரும் வகையில் கொரியா அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் ஹூ-வின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துடன் நேற்று அயோத்தி நகருக்கு வந்த தென்கொரியா அதிபரின் மனைவி  கிம் ஜங்-சூக் இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.


பின்னர், அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் நேற்றிரவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவ நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார்.

இன்று ஆக்ரா நகருக்கு வந்த கிம் ஜங்-சூக், மொகலாய மன்னர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாக உருவாக்கப்பட்ட பளிங்குக்கல் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலை கண்டு களித்தார்.

தென்கொரியாவில் இருந்து தன்னுடன் இந்தியா வந்துள்ள அதிகாரிகள் மற்றும் உ.பி. மந்திரிகளுடன் தாஜ் மஹால் எதிரே அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். #KimJungSook #TajMahal #KimJungSookinTajMahal
Tags:    

Similar News