செய்திகள்
கைது

ஆரல்வாய்மொழியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2021-11-21 07:06 GMT   |   Update On 2021-11-21 07:06 GMT
ஆரல்வாய்மொழியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி:

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையிலான போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப்-டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி பகுதியில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கிலோ கஞ்சாவும் சிக்கியது. பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது அவர்கள் வெள்ளமடத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி, நாங்குநேரியைச் சேர்ந்த துரைபாண்டி என்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் வெளியூர்களிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை வாலிபர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மந்திர மூர்த்தி அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

Tags:    

Similar News