செய்திகள்
கோப்புபடம்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி - முகமூடி மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2020-11-30 13:45 GMT   |   Update On 2020-11-30 13:45 GMT
தியாகதுருகத்தில் ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற முகமூடி மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகத்தில் சேலம் மெயின் ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. அதன் அருகே வங்கி ஏ.டி.எம். மையமும் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மும்பையில் உள்ள செக்யூரிட்டி கட்டுப்பாட்டு அறையில் இருந்து குறிப்பிட்ட வங்கியின் மேலாளருக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர் வங்கி அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் முகமூடி அணிந்த மர்மநபர் எந்திரத்தை உடைக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு வங்கி மேலாளர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் வெளியூரில் இருந்ததால் உடனடியாக துணை கிளை மேலாளர் வினோத்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி ஏ.டி.எம். மையத்தை விரைந்து சென்று பார்க்கும்படி கூறினார். உடனே அவரும் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள இரும்பு கதவு திறந்து கிடந்தது. ஆனால் பணம் ஏதும் திருடு போகவில்லை.

பின்னர் இதுகுறித்து துணை கிளை மேலாளர் வினோத்குமார் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் ஏ.டி.எம். மையத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முகமுடி அணிந்த நபர் வங்கி ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News