செய்திகள்
ரெயிலை மறித்து போராட்டம்

திருவாரூரில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து ரெயிலை மறித்து போராட்டம்

Published On 2020-01-13 15:00 GMT   |   Update On 2020-01-13 15:00 GMT
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்:

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மாணவர் அமைப்பினர் என அனைத்து தரப்பினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் புதுக்கி எனுமிடத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இணைந்து, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அடியக்க மங்கலம் புதுக்காலனி பகுதியில் இருந்து நாகை தேசிய நெடுஞ்சாலை வழியாக பேரணியாக சென்ற மனிதநேய மக்கள் கட்சி மற்றும் த.மு.மு.க.வினர், ரெயில் நிலையம் அருகே போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு ரெயில் நிலையத்துக்குள் உள்ளே சென்றனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரெயில் நிலையத்தில் உள்ளே நுழைந்து திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரெயிலை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நீடித்தது. இதையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News