செய்திகள்
கைது

அரவக்குறிச்சி அருகே 13 வயது பள்ளி சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது

Published On 2021-08-05 04:36 GMT   |   Update On 2021-08-05 04:36 GMT
கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமண வழக்கில் ஒரே நாளில் 2 மாப்பிள்ளைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர்:

கொரோனா பேரிடர் காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்க காவல்துறையுடன் இணைந்து சமூக நலத்துறை அதிகாரிகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மகள்களை திருமணம் செய்து கொடுக்க தயாராகும் பெற்றோர்கள் பள்ளி இடைநிற்றலுக்கும் வழிவகுத்து வருகின்றனர். கிராமப்புறங்களில் அதிக அளவில் பள்ளி படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கும் பிள்ளைகளை திருமணம் செய்து வைத்து அனுப்பி விடுகின்றனர்.

சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் குழந்தை திருமணம், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இருவேறு சம்பவங்களில் மைனர் பெண்களை திருமணம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அரவக்குறிச்சி அருகே உள்ள நொச்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 27).

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும் சில தினங்களுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இதுபற்றி விபரம் அறிந்தவர்கள் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின்கீழ் மாப்பிள்ளை தர்மராஜ் அவரது தந்தை துரைசாமி, தாய் அருக்காணி, சிறுமியின் தந்தை மாரியப்பன், தாய் ராஜாத்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தர்மராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இதேபோன்று இன்னொரு குழந்தை திருமண வழக்கில் மெக்கானிக் ஒருவர் சிக்கினார். கரூர் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). மெக்கானிக். இவர் கடந்த மார்ச் 31-ந்தேதி 16 வயது சிறுமி ஒருவரை கோவிலில் வைத்து திருமணம் செய்தார். இதுபற்றி அறிந்த சமூக நல அலுவலர் சுகுனா கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். உடந்தையாக இருந்த அவரின் உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமண வழக்கில் ஒரே நாளில் 2 மாப்பிள்ளைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News