உள்ளூர் செய்திகள்
வாலிபர் பிணம்

ஆலாந்துறை அருகே தோட்டத்தில் புகுந்து திருட முயன்ற வாலிபர் பிணமாக மீட்பு- போலீசார் விசாரணை

Published On 2022-01-12 05:55 GMT   |   Update On 2022-01-12 05:55 GMT
ஆலாந்துறை அருகே தோட்டத்தில் புகுந்து திருட முயன்ற வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரூர்:

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள சித்திரைச்சாவடி தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்(வயது55). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் விஸ்வநாதன்(30), சம்பத்குமார்(30) ஆகியோர் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள்.

நேற்று நள்ளிரவு நேரத்தில் இவர்கள் தங்கி இருந்த அறையை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அவர்கள் எழுந்து வந்து கதவை திறந்த போது வெளியில் ஒரு வாலிபர் நின்றிருந்தார்.

அவர் தான் வெகு தொலைவில் இருந்து வருவதாகவும், குடிக்க தண்ணீர் வேண்டும் எனவும் கேட்டார். அவர்களும் தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றனர். அந்த சமயத்தில் அந்த வாலிபர் அங்குள்ள மோட்டார் பொருட்களை திருட முயற்சி செய்தார். இதனை விஸ்வநாதனும், சம்பத்குமாரும் பார்த்து விட்டனர்.

இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். இதனால் பதறி போன வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். ஆனால் 2 பேரும் விரட்டி சென்று அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை அங்குள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்து விட்டு ஆலாந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கிருந்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தோட்டத்திற்கு வந்து, அந்த வாலிபரிடம் விசாரித்தார்.

அப்போது அவர் இந்தியில் பேசினார். மேலும் குடிபோதையில் இருந்தார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர், தோட்டத்தில் இருக்க கூடிய விஸ்வநாதன், சம்பத்குமார், ஆகியோரிடம், இந்த நபர் தற்போது குடிபோதையில் உள்ளார். காலையில் வந்து இவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்கிறேன் என கூறி விட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை ஆலாந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்த தோட்டத்திற்கு சென்றார். ஆனால் அங்கு மரத்தில் கட்டி வைத்திருந்த வாலிபரை காணவில்லை.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர், அங்கு இருந்தவர்களிடம் கேட்டபோது,நாங்கள் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, மரத்தில் கட்டி வைத்திருந்த வாலிபர் கயிற்றை அவிழ்த்து விட்டு தப்பியோடி விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என்றனர். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பூலுவம்பட்டி- தென்னமநல்லூர் செல்லும் ரோட்டில் நொய்யல் ஆற்று பகுதியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்ட பொதுமக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அவர் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்த்தனர். மேலும் அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தது.

இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் சித்திரைச்சாவடி தெற்கு தோட்டம் பகுதியில் திருட முயன்ற வாலிபர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

மேலும் திருட வந்தததாக தோட்ட தொழிலாளர்கள் கட்டி வைக்கப்பட்ட நபர் பிணமாக மீட்கப்பட்டுள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தப்பியோட முயற்சித்தபோது தவறி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News