செய்திகள்
சுரேஷ்குமார்

குமரியில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

Published On 2020-10-01 14:46 GMT   |   Update On 2020-10-01 14:46 GMT
குமரியில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். இந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பூதப்பாண்டி:

குமரியில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. எனினும் கொரோனாவால் ஏற்படும் உயிர்பலி குறைந்தபாடில்லை. இந்த நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சோகம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

நித்திரவிளையை அடுத்த காஞ்சாம்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 47). இவர் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு மூச்சுதிணறல் பாதிப்பு அதிகமானது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரிடம் சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுரேஷ்குமாருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியான சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலியான சுரேஷ்குமாருக்கு மஞ்சு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News