தோஷ பரிகாரங்கள்
ஆண்டாள்

திருமணம் கை கூட செய்யும் திருப்பாவை- திருவெம்பாவை

Published On 2021-12-16 05:04 GMT   |   Update On 2021-12-16 05:04 GMT
திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும்.
இன்று மார்கழி மாதம் பிறந்தது. நமது ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த வகையில் மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற்காலை நேரம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள 2 நாழிகை நேரமே தேவர்களின் விடியற்காலமாக கருதப்படுகிறது. இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள். இந்த நேரத்தில் தான் தேவர்கள் கோவிலுக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி சொல்வார்கள். இறைவன் கண் விழித்ததும் முதல் ஆராதனையை செய்வார்கள்.

அந்த சமயத்தில் நாமும் வழிபாடு நடத்தினால் பகவானின் அருளை மிகச் சுலபமாக பெற முடியும். அதனால் தான் மார்கழி மாதம் மங்களகரமான, புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார். பாரத யுத்தம் இந்த மாதம் தான் நடந்தது. பகவத்கீதை அருளப்பட்டது மார்கழியில்தான். திருப்பாற்கடல் கடையப்பட்டதும், அதில் இருந்து தோன்றிய விஷத்தை சிவபெருமான் உண்டதும் மார்கழி மாதத்தில்தான் என்று புராணம் சொல்கிறது.

அய்யப்பன், ஆஞ்சநேயர் அவதரித்ததும், ஆண்டாள் அதிகாலையில் எழுந்து நீராடி, திருப்பாவை பாடி திருமால் மனதில் இடம் பிடித்ததும் இந்த மாதத்தில்தான். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான். இத்தகைய சிறப்புடைய மார்கழி மாதத்தை சிலர் மனம் போன போக்கில் பீடை மாதம் என்கிறார்கள். உண்மையில் மார்கழியைதான் முன்னோர்கள் “பீடுடை மாதம்” என்றழைத்தனர்.

பீடுடை என்றால் சிறப்பான மங்களகரம் நிறைந்தது என்று பொருள். பீடுடை என்ற வார்த்தை உச்சரிப்பில் திரிந்து, மருவி பீடை என்றாகி விட்டது. இனியாவது மார்கழியை பீடை மாதம் என்று சொல்லாதீர்கள். எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால் மனம் தூய்மை பெறும்.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் செயல்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும். மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.
மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். அதுபோல திருவாதிரை தினத்தன்று களி நிவேதனம் செய்து நடராஜரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை. மற்றொன்று நாச்சியார் திருமொழி.

மார்கழி நோன்பு இருக்கும் பெண்கள் அதிகாலையில் பாடுவதற்காக திருப்பாவையை ஆண்டாள் இயற்றினார். திருப்பாவையில் மொத்தம் 30 பாடல்கள். நோன்பு இருந்த ஒவ்வொரு நாளும் ஒரு பாடலாக 30 பாடலை ஆண்டாள் பாடினார். வேதங்களின் முடிவுப் பகுதியாகிய உபநிஷதங்களின் நுட்பமான பொருட்களை திருப்பாவை எடுத்துச் சொல்வதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பெண்கள் பாடுவதற்கு ஏற்ப எளிய தமிழ், இனிய தமிழ், பக்தி சுவை சொட்டும் பைந்தமிழில் திருப்பாவையை ஆண்டாள் பாடியுள்ளார். பெருமாள் கோவில்களில் 108 திவ்ய தேசங்களில் சாற்று முறை காலங்களில் திருப்பாவையே முதன்மையாகப் பாடப்படுகிறது. ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்களை படிப்பவர்கள் முதலிலும் முடிவிலும் திருப்பாவை படிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பதி ஏழுமலையானை திருப்பாவை பாடிதான் எழுப்புகிறார்கள். ராமானுஜர் திருப்பாவை பாடிதான் பிச்சை எடுத்ததாக குறிப்புகள் உள்ளன. திருப்பாவை வேத வித்து, கீதையின் சாரம் என்றெல்லாம் புகழப்படுகிறது. “திருப்பாவைக்கு வியாக்கியானம் சொல்ல ஆள் இல்லை” என்று ராமானுஜர் கூறியுள்ளார்.

வேதம் போல சிலருக்கு மட்டுமே பயன்படாமல், எவரும், எல்லோரும் பக்தி ஞானம் பெற்று முக்தி பெற திருப்பாவை வழி காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி பர்மா, கம்போடியா, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா நாடுகளிலும் திருப்பாவை பாடப்படுகிறது. தாய் லாந்து கோவில் களிலும், அரண்மனையிலும் இன்றும் திருப்பாவை பாடப்படுகிறது.

திருப்பாவையில் உள்ள 30 பாடல்களில் முதல் 5 பாடல்கள் மார்கழி நோன்பு பற்றியும், அடுத்த 10 பாடல்கள் தோழிகள் அதிகாலையில் எழுப்பப்படுவது பற்றியும், அதற்கு அடுத்த 10 பாடல்கள் கண்ணனை கண் விழிக்க செய்யும், கடைசி 5 பாடல்கள் பாவை நோன்பு பயன்கள் பற்றியும் சொல்கிறது.
திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள். எல்லா நலன்களும் கிடைக்கும். அதோடு வாழ்வாங்கு வாழ்ந்து பின்பு மோட்சத்தையும் அடைவார்கள்.
Tags:    

Similar News