செய்திகள்
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே மழை நீர் தேங்கி கிடந்தபோது எடுத்த படம்.

தூத்துக்குடியில் ‘திடீர்’ மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-05-09 10:43 GMT   |   Update On 2021-05-09 10:43 GMT
தூத்துக்குடியில் திடீரென பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இதற்கிடையே அக்னி நட்சத்திரம் காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட தயங்கி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடியில் திடீரென பரவலாக நல்ல மழை பெய்தது. பிரையன்ட் நகர், கால்டுவெல் காலனி, மட்டக்கடை, அண்ணாநகர், டூவிபுரம் போன்ற பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழையால் மாநகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது.

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் மழையில் நனைந்தபடி காய்கறிகள் மற்றும் பலசரக்குகளை வாங்கி சென்றனர். திடீரென பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி பகுதிகளில் திடீரென பெய்த மழையின் காரணமாக தூத்துக்குடி தற்காலிக பஸ்நிலையம் அருகே உள்ள ஜெயராஜ் ரோடு பகுதியில் ஒரு பழமையான டீக்கடை கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு கடைக்குள் இருந்த 4 பேருக்கும், டீ குடித்துக் கொண்டிருந்த 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News