தொழில்நுட்பம்
டிம் குக்

டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அம்சங்களை அறிவித்த ஆப்பிள்

Published On 2021-06-08 03:50 GMT   |   Update On 2021-06-08 03:50 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அம்சங்கள் மற்றும் அவற்றின் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 21) நேற்று நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வு ஆப்பிள் வளாகத்தில் ஏற்கனவே படமாக்கப்பட்டு, நேரலை செய்யப்பட்டது. அசத்தலான அறிமுக வீடியோவுடன் துவங்கிய டெவலப்பர்கள் நிகழ்வில் புது ஒஎஸ் அப்டேட்களை ஆப்பிள் மென்பொருள் பொறியாளர்கள் அறிவித்தனர்.

ஐஒஎஸ் 15

அதன்படி ஐஒஎஸ் 15 தளத்தில் பேஸ்டைம் சேவை பல்வேறு புது அப்டேட்களை பெற்றுள்ளது. இம்முறை பேஸ்டைம் சேவையில் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஆடியோ அனுபவம் முன்பு இருந்ததை விட மேம்பட்டு இருக்கிறது. பேஸ்டைம் செயலியில் புதிதாக போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பேஸ்டைம் அழைப்புகளை லின்க்குகளாக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. 



இதேபோன்று புது ஐஒஎஸ் தளத்தின் மெசேஜஸ் சேவையில் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மெசேஜஸ் செயலியில் பல்வேறு வசதிகள் அடங்கிய (DND-Do Not Disturb) அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. போக்கஸ் என அழைக்கப்படும் புது அம்சம் எதுபோன்ற குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் வரவேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்ய வழி வகுக்கிறது.

ஐஒஎஸ் 15 தளத்தில் ஆப்பிள் கீஸ் அம்சம் பல்வேறு புது கார்கள், தனியார் விடுதிகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவையை விரிவுப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆப்பிள் இணைந்துள்ளது. இதேபோன்று அடையாள சான்று மற்றும் இதர தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய கார்டுகளை ஆப்பிள் வாலெட் செயலியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இவற்றுடன் ஆப்பிள் மேப், வெதர் செயலிகளிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் மேப் சேவையில் முன்பு இருந்ததை விட அதிக நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. புது மேப் செயலியில் முகவரிகள் முற்றிலும் புது முறையில் அதிக தெளிவாக காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஐஒஎஸ் 15 ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தில் அதிக அம்சங்களை வழங்குகிறது. மேலும் இது ஆடியோ அனுபவத்தை முன்பு இருந்ததை விட அதிகளவு மேம்படுத்தி இருக்கிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் சாதனத்தில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.  



ஐபேட் ஒஎஸ் 15

ஐபேட் ஒஎஸ் 15 விட்ஜெட்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விட்ஜெட்களை பொழுதுபோக்கு, விளையாட்டு என பல விதங்களில் பிரித்து அவற்றை மிக அழகாக ஒருங்கிணைத்து அடுக்கி வைத்துக் கொள்ளலாம். ஆப் லைப்ரரி அம்சத்தில் அனைத்து செயலிகளையும் விட்ஜெட் மூலம் பார்க்கலாம்.

இதில் உள்ள மல்டி டாஸ்கிங் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்த முடியும். செயலியின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அளவை திரையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் ஒவ்வொரு செயலிக்கும் ஏற்ப அசத்தலான வசதிகளை வழங்குகிறது.

இதன் டிரான்ஸ்லேட் அம்சம் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக வசதிகளை வழங்குகிறது. வருடாந்திர அடிப்படையில் ஆப்பிள் டிரான்ஸ்லேட் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் ஸ்விப்ட் பிளேகிரவுண்ட் தளமும் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்த தளத்தில் செயலிகளுக்கு குறியீடு எழுதும் போதே அவற்றை சோதனை செய்யும் வசதியும், அவற்றை உடனடியாக ஆப் ஸ்டோரில் பதிவேற்றம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 



பிரைவசி

இன்றைய உரையில் ஆப்பிள் நிறுவனம் பிரைவசி சார்ந்த அம்சங்களை அறிவித்தது. அதன்படி மெயில் பிரைவசி ப்ரோடெக்ஷன் அறிமுகமாகிறது. இது ஐபி முகவரிகளை மறைக்கும். மேலும் சபாரி பிரவுசரில் டிராக் செய்வோரிடம் இருந்தும் ஐபி முகவரிகளை மறைக்கிறது. இத்துடன் செயலிகள் எவ்வாறு பிரைவசி செட்டிங்களை பயன்படுத்திகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.



வாட்ச் ஒஎஸ் 8

புதிய வாட்ச் ஒஎஸ் 8 புதுவிதமான அனிமேஷன்களை கொண்டுள்ளது. இவை பயனர்கள் மனநிலையை ஒரே தன்மையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது. மேலும் பயனர் சுவாச அளவில் மாற்றம் ஏற்பட்டால் உடனே அதுபற்றிய நோட்டிபிகேஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு உடற்பயிற்சிகள் வாட்ச் ஒஎஸ்-இல் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் அதிக பிரபலமான வாட்ச் பேஸ் புது ஒஎஸ்-இல் மாற்றப்பட்டு இருக்கிறது. புது தளத்தில் வாட்ச் பேஸ் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது. இத்துடன் புதிதாக போட்டோஸ் ஆப் சேர்க்கப்பட்டு உள்ளது. வாட்ச் ஒஎஸ் கொண்டு குறுந்தகவல் அனுப்பும் வசதியில் அசத்தலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.



மேக் ஒஎஸ் 

மேக் ஒஎஸ் மான்ட்ரெ தளத்தில் யுனிவர்சல் கண்ட்ரோல் எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேக் கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு ஐபேட் சாதனத்தையும் இயக்க முடியும். இதே போன்று ஐமேக் மவுஸ் மற்றும் கீபோர்டு கொண்டு ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களை இயக்கலாம்.  

மேக் சாதனங்களுக்கான ஏர்பிளே அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இருப்பதை போன்றே ஏர்பிளே அம்சம் ஐமேக் சாதனங்களிலும் இயங்கும். புதிய மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ் மற்றும் ஷார்ட்கட் எடிட்டர் அம்சங்கள் உள்ளன. இது மேக் சாதனங்களின் பல்வேறு செயலிகளில் இயங்கும். 

உலகின் அதிவேக பிரவுசராக இருக்கும் சபாரி பயனர் விவரங்களை பாதுகாப்பதில் தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டு டேப்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சர்ச் டேப் முன்பைவிட சிறியதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு இதர டேப்களும் அளவில் சிறியதாக இருக்கின்றன. 

புதிய சபாரி பிரவுசர் மேக், ஐமேக், ஐபேட் என அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோனில் சர்ச் பார் திரையில் மென்மையாக க்ளிக் செய்தால் தோன்றும். இதனால் சிறு திரையிலும் பெரிய பிரவுசர் போன்ற அனுபவம் கிடைக்கும்.
Tags:    

Similar News