செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 என்ஜினீயரிங் மாணவர்கள் பலி

Published On 2018-10-08 21:26 GMT   |   Update On 2018-10-08 21:26 GMT
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சீபுரம்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் உஜ்வால்கோயங்கா (வயது 20). பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆதித்யாசேகர் (20). இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் வேலூருக்கு திரும்பிச்சென்று கொண்டு இருந்தனர்.

காஞ்சீபுரம் அருகே கீழம்பி ஜங்சன் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் வேகமாக வந்தனர். திடீரென அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தனர். அதே வேகத்தில் இருவரும் சிலஅடி தூரத்துக்கு மோட்டார் சைக்கிளோடு சாலையில் உரசியபடி இழுத்து செல்லப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது.

மாணவர்கள் இருவரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். உடனடியாக அவர்களை மீட்டு உஜ்வால்கோயங்காவை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், அவருடைய நண்பரான ஆதித்யாசேகரை வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News