செய்திகள்
அனில் பரப்

ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வரிசையில் நின்ற போக்குவரத்து துறை மந்திரி

Published On 2021-02-01 02:50 GMT   |   Update On 2021-02-01 02:50 GMT
ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் தானே வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் வரிசையில் நின்று அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளார்.
மும்பை :

தானேயில் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்துக்கு சம்பவத்தன்று போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர் பொதுமக்கள் போல ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வரிசையில் நின்று உள்ளார். அதிர்ஷ்டவமாக மந்திரி ஓட்டுனர் உரிம விண்ணப்பம் கொடுக்க இருந்த ஏஜெண்டும் அவரிடம் லஞ்சம் எதுவும் கேட்கவில்லை.

எனினும் மந்திரி அலுவலகத்துக்கு சென்ற போது அங்கு பல அதிகாரிகள் இல்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் மந்திரி ஓட்டுனர் உரிமத்துக்கு வரிசையில் நின்றதை அதிகாரிகள் சிலர் கவனித்தனர். முதலில் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பின்னர் பதற்றத்துடன் மந்திரியை அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர்.

இந்த திடீர் ஆய்வு குறித்து மந்திரி அனில் பரப் கூறியதாவது:-

நான் யாரிடமும் எதுவும் கூறவில்லை. வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் ஏராளமான ஏஜெண்டுகள் இருந்தனர். எனவே முதலில் ஆர்.டி.ஒ. அலுவலகம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க விரும்பினேன். விண்ணப்பத்தை நிரப்பி வரிசையில் நின்றேன். என்னிடம் யாரும் லஞ்சம் கேட்கவில்லை. ஆனால் பல அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லை. அதுகுறித்து நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்புமாறு போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். இனிமேல் 2 வாரங்களுக்கு ஒருமுறை மாநிலத்தில் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். அப்போது விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் பலர் இல்லாதது குறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், "தென்மும்பையில் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவே அதிகாரிகள் சென்று இருந்தனர். மந்திரி வந்தது தெரிந்ததும் அவர்கள் பாதி வழியிலேயே திரும்பி அலுவலகத்துக்கு வந்துவிட்டனர்" என்றார்.
Tags:    

Similar News