செய்திகள்
அபராதம்

முழு ஊரடங்கிலும் மட்டன்-சிக்கன் வாங்க சுற்றி திரிந்த 1500 பேருக்கு அபராதம்

Published On 2021-05-17 10:53 GMT   |   Update On 2021-05-17 10:53 GMT
வாகனங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி நோய் பரப்பும் வகையில் சுற்றிய சுமார் 1500 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

கோவை:

கோவையில் முழு ஊரடங்கையொட்டி அனைத்துவிதமான கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டது. அத்தியாவசிய பணிகள் செய்யும் ஊழியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் மட்டும் வெளியே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் அனுமதியின்றி பலர் வெளியிடங்களில் சுற்றி வலம் வந்தனர். நகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மழையிலும் சிலர் வாகனங்களில் வலம் வந்தனர். வாகனங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி நோய் பரப்பும் வகையில் சுற்றிய சுமார் 1500 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

18 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் சிலர் முழு ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் மட்டன், சிக்கன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தது தெரியவந்தது. பல இடங்களில் இறைச்சிக் கடைகளை மூடி பின் வழியாகவும், ஜன்னல் வழியாகவும் மட்டன், சிக்கன் விற்பனை செய்து வந்தனர். இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் சிலர் நோய்தொற்று அபாயத்தை பற்றி கவலைப்படாமல் வெளியே சுற்றினர். சில இடங்களில் போலீசார் இறைச்சி வாங்க வந்த பொதுமக்களை நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்.

இதேபோல் மதுபாட்டில்களை தேடியும் சிலர் வீட்டை விட்டு வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர். ரோந்து போலீசார் பொது இடங்களில் தேவையின்றி வலம் வந்தவர்களை எச்சரித்தனர்.

கோவை நகரில் 99 சதவீதம் முழுஊரடங்கை மக்கள் கடை பிடித்தனர். வெகுசிலரே வெளியே வந்துள்ளனர். கடைகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் அனாவசியமாக வெளியே வர வேண்டிய நிலை ஏற்படவில்லை. சிலர் மருத்துவ காரணங்களுக்காகவும், சிலர் மூடிய கடையில் ஏதாவது பொருட்கள் கிடைக்குமா?, இறைச்சிக் கடைகள் திறந்திருக்குமா? என தேடி வந்தனர்.வாகனங்களில் வந்த பொதுமக்களை நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம். ஊரடங்கு சரியாக கடை பிடிக்கப்பட்டால் நோய்த் தொற்று வெகுவாக குறையும். நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊரடங்கு குறித்த ஒலி பெருக்கி தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. நகரில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ரோடுகள் முடக்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்தால் பாது காப்பாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News