செய்திகள்
கொரோனா வைரஸ் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிக்கு காலக்கெடு- இந்திய அறிவியல் அகாடமி எதிர்ப்பு

Published On 2020-07-07 04:17 GMT   |   Update On 2020-07-07 04:17 GMT
கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த ஆகஸ்டு 15-ந் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்ததற்கு இந்திய அறிவியல் அகாடமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரசை ஒடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி இந்தியாவிலும் நடந்து வருகிறது. இதில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இதற்கு ‘கோவேக்சின்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதிக்க 12 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணியை முடித்து, ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐ.சி.எம்.ஆர். இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்கு ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் பலர் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்திய அறிவியல் அகாடமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பூசியை உருவாக்கியதை வரவேற்கிறோம். அதை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு வாழ்த்துகிறோம். ஆனால், விஞ்ஞானிகளை-குறிப்பாக, கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை கொண்ட எங்கள் அமைப்பு, ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ள ஆகஸ்டு 15-ந் தேதி காலக்கெடுவை சாத்தியமற்றதாக கருதுகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை உண்டாக்கி இருக்கிறது.

நிர்வாகரீதியான ஒப்புதலை வேண்டுமானால் விரைவுபடுத்தலாம். ஆனால், அறிவியல்ரீதியான பரிசோதனை நடைமுறைகள், தகவல்கள் சேகரிப்பு போன்றவற்றுக்கு கால அவகாசம் தேவைப்படும். அதை அவசரப்படுத்தினால், தரத்தில் சமரசம் செய்ய வேண்டியதாகி விடும்.

தடுப்பூசி பரிசோதனைக்கு 3 கட்டங்கள் தேவைப்படும். முதல் கட்டத்தில், பாதுகாப்பை மதிப்பிட வேண்டும். 2-ம் கட்டத்தில், பல்வேறு ‘டோஸ்’ அளவின் திறன் மற்றும் பக்கவிளைவுகளை பார்க்க வேண்டும். 3-ம் கட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆரோக்கியமான மனிதர்களில் அதன் திறன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகுதான் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

மருத்துவ பரிசோதனைக்கு ஆரோக்கியமான தன்னார்வலர்கள் தேவை. அதற்கு ஒப்புதல்கள் பெற வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்ய பல வாரங்கள் தேவைப்படும். அதற்கு முன்பு தகவல்களை சேகரிக்கக்கூடாது.

மேலும், ஒரு கட்டத்தில் பெறப்பட்ட தகவல்களை போதிய அளவுக்கு ஆய்வு செய்த பிறகே அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் ஏற்க முடியாததாக இருந்தால், அடுத்தகட்ட ஆய்வை கைவிட வேண்டும். எனவே, இந்த காலக்கெடுவானது, அர்த்தமற்றதாகவும், முன்எப்போதும் இல்லாததாகவும் இருக்கிறது. இதில் அவசரம் காட்டுவது, தரத்தில் சமரசம் செய்து கொள்வதுடன், இந்திய மக்களிடம் எதிர்பாராத அளவுக்கு நீண்ட காலத்துக்கு பாதிப்பை உண்டாக்கி விடும்.

இவ்வாறு இந்திய அறிவியல் அகாடமி கூறியுள்ளது.
Tags:    

Similar News