உள்ளூர் செய்திகள்
சி.சி.டி.வி.யில் பதிவான பெண்ணின் உருவம்.

சுரண்டையில் நகை எடுப்பது போல் சென்று கம்மலை திருடிய பெண் கைது

Published On 2022-01-29 04:36 GMT   |   Update On 2022-01-29 08:43 GMT
சுரண்டை அருகே நகை எடுப்பது போல் சென்று கம்மலை திருடிய பெண்ணை கடை உரிமையாளர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

நெல்லை:

சுரண்டை அருகே உள்ள தட்டான்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாமுத்தாள் (வயது48). முருகன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாமுத்தாள் சுரண்டை பழைய மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு தங்க கம்மல் ஒன்று எடுப்பதற்காக ஒவ்வொரு கம்மலாக எடுத்து பார்த்துள்ளார்.

பின்னர் பணம் குறைவாக இருப்பதாக கூறிவிட்டு அவர் நகை எடுக்காமல் திரும்பி சென்று விட்டார். இதற்கிடையே சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர் சுந்தர குமார் கம்மல்கள் அடுக்கி வைத்திருந்த அட்டையை எடுத்து பார்த்த போது அதில் ஒரு கம்மல் காணாமல் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரகுமார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தார். அப்போது அதில் சாமுத்தாள் கம்மலை திருடியது தெரியவந்தது. அவரை பற்றிய விபரம் தெரியாததால் சுந்தரகுமார், சாமுத்தாளை தேடி வந்தார்.

இந்நிலையில் நேற்று சாமுத்தாள் மீண்டும் அதே கடைக்கு நகை எடுப்பது போல வந்துள்ளார். சி.சி.டி.வி.யில் பதிவான சாமுத்தாளின் உருவப்படத்தை ஏற்கனவே எடுத்து வைத்திருந்த சுந்தரகுமார் அவரை கையும், களவுமாக பிடித்து சுரண்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

மேலும் அவர் திருடிய சி.சி.டி.வி.காட்சிகளையும் போலீசில் காண்பித்தார். இதையடுத்து போலீசார் சாமுத்தாள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கைதான சாமுத்தாள் ஏற்கனவே இதுபோன்ற சில கடைகளில் கைவரிசை காட்டியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News