செய்திகள்
கமலா ஹாரிஸ்

ஒற்றை வரியில் அமெரிக்க அதிபரின் மூக்கை உடைத்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி.

Published On 2019-12-04 10:12 GMT   |   Update On 2019-12-04 10:12 GMT
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் வெளியிட்ட அறிவிப்பை கேலி செய்த டிரம்ப்புக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு (உக்ரைன்) நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தாய்நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் தொடங்கினர். ஜனநாயக கட்சியினரின் குற்றச்சாட்டை ஆரம்பத்தில் இருந்து மறுத்து வரும் டிரம்ப், இந்த பதவி நீக்க விசாரணை எதிர்க்கட்சியினரின் சூனிய வேட்டை என விமர்சித்தார்.

ஆனாலும் நாடாளுமன்ற விசாரணைக்குழு இந்த பதவி நீக்க விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் இந்த விசாரணை மூடப்பட்ட அரங்கத்துக்குள் நடந்து வந்தது. அதன்பிறகு விசாரணையின் வெளிப்படை தன்மையை உணர்த்தும் வகையில் விசாரணை நடவடிக்கைகள் டி.வி.யில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

நேரலை விசாரணையில் ஆஜரான அமெரிக்க தூதர்கள் 2 பேர் டிரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

ஆனால், அவர்களின் சாட்சியத்தை ஏற்க மறுத்த டிரம்ப், தொடர்ந்து விசாரணை நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார். தற்போது இந்த பதவி நீக்க விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
அதன்படி இன்று (புதன்கிழமை) நடைபெறும் விசாரணையில் ஜனாபதி டிரம்ப் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராக வேண்டுமென நாடாளுமன்ற விசாரணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த விசாரணை நடைமுறைகளில் அடிப்படை நேர்மை இல்லாததால் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது வக்கீல்கள் பதவி நீக்க விசாரணையில் ஆஜராகமாட்டார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் எம்.பி. தற்போது அறிவித்துள்ளார்.



‘நேட்டோ’ மாநாட்டில் பங்கேற்பதற்காக டொனால்ட் டிரம்ப் லண்டன் சென்றுள்ள நிலையில் அவரது தேர்தல் பிரசாரக்குழுவின் முன்னாள் மேலாளரான கோரே லெவென்டோவ்ஸ்க்கி என்பவர், கமலா ஹாரிஸ் வெளியிட்ட அறிவிப்பை கேலி செய்யும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

’மிகவும் மோசம்! உங்கள் பிரிவுக்கு வருந்துகிறோம்’ (very bad. we'll miss you Kamala) என அந்த பதிவில் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரக்குழுவின் முன்னாள் மேலாளரான கோரே லெவென் டோவ்ஸ்க்கி என்பவர்   குறிப்பிட்டிருந்தார். இதற்கு உடனடியாக கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் சரியான பதிலடியை கொடுத்துள்ளார்.

‘கவலைப்படாதீர்கள், அதிபர் அவர்களே! (பதவி நீக்க) விசாரணையில் நான் உங்களை பார்ப்பேன்’ என கமலா ஹாரிஸ் ஒரு வரியில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags:    

Similar News