செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 32 ஆயிரத்து 700 டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை

Published On 2021-04-06 01:50 GMT   |   Update On 2021-04-06 07:45 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தையே அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கும் நிலையில் கூடுதலாக 32 ஆயிரத்து 700 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. இது அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தையே அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால் கொரோனா தொற்று குறைந்தது. இருப்பினும் தற்போது நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வந்துகொண்டிருக்கிறது.

இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசாருக்கு போடப்பட்டது. இதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 60 வயது வரை இணைநோய் உள்ளவர்களுக்கும் செலுத்தப்பட்டது.

கடந்த வாரத்தில் இருந்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகளிலும், 13 ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா தொற்று திருப்பூரில் தற்போது வேகமாக பரவி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்திற்கு 82 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்திருந்தது. தற்போது கூடுதலாக கோவிஷீல்டு 27 ஆயிரத்து 700 டோசும், கோவேக்சின் 5 ஆயிரம் டோசும் என மொத்தம் 32 ஆயிரத்து 700 டோஸ் திருப்பூர் மாவட்டத்திற்கு நேற்று வந்துள்ளது. இவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
Tags:    

Similar News