உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்த இளைஞர்களை அப்புறப்படுத்திய போலீசார்.

ஆண்டிப்பட்டி அருகே காளைகளுக்கு பயிற்சி அளித்த இளைஞர்கள் மீது தடியடி

Published On 2022-01-29 06:42 GMT   |   Update On 2022-01-29 06:42 GMT
மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கிய போலீசாரை கண்டித்து வரதராஜபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் வரதராஜபுரம் கண்மாய் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள கண்மாய் பகுதியில் வாடிவாசல் போன்ற தடுப்புகள் அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ராஜதானி போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர். அப்போது அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளித்ததாக வரதராஜபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கிய போலீசாரை கண்டித்து வரதராஜபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் வரதராஜபுரம் கண்மாய் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோ‌ஷமிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி தங்ககிருஷ்ணன் நேரில் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்தது தவறு, முறையாக அனுமதி பெற்றுதான் இதுபோன்ற பயிற்சிகளை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்களிடம் டி.எஸ்.பி அறிவுறுத்தி அவர்களை கலைந்து போகும்படி கூறினார்.

இதனையடுத்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசாரை கண்டித்து இளைஞர்கள் மேற்கொண்ட தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News