செய்திகள்
திலீப் கோஷ்

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் சுடப்படுவார்கள் - மே.வ பாஜக தலைவர்

Published On 2020-01-13 05:28 GMT   |   Update On 2020-01-13 10:15 GMT
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் உத்தர பிரதேசத்தில் நடந்தது போன்று சுட்டு வீழ்த்தப்படுவார்கள் என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.
கொல்கத்தா:

குடியுரிமை சட்டத்தைப் பற்றியும் அதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களை குறித்தும் நாம் அனைவரும் அறிந்ததே. பல்வேறு அரசியல் தலைவர்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இச்சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைச் சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை முடக்குவதாகவும் அம்மாநில அரசு கூறியது. 

இந்நிலையில், போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்தது போன்று சுடப்படுவார்கள் என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திலீப் கோஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘மேற்கு வங்காள மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, ரெயில்வே சொத்து மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை (போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு) எடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிடவில்லை.

ஆனால், உத்தர பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை (துப்பாக்கிச் சூடு) எடுக்கப்பட்டது. பொதுச்சொத்துக்கள் என்ன தனிநபரின் தந்தையின் சொத்தா தீ வைத்து கொளுத்துவதற்கு? வரி செலுத்துவோரின் பணத்தில் உருவாக்கப்பட்ட அரசின் சொத்துக்களை அவர்கள் எவ்வாறு அழிக்க முடியும். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்தது போல சுடப்படுவார்கள்’ என கூறினார்.
Tags:    

Similar News