செய்திகள்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பொதுத்தேர்வுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்

Published On 2021-07-27 03:12 GMT   |   Update On 2021-07-27 03:12 GMT
கொரோனா காரணமாக தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை:

கல்வி மேலாண்மை தகவல் மையம் எனப்படும் சாப்ட்வேர் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இதுதொடர்பாகவும், பள்ளிக்கல்வித் துறையில் தற்போது உள்ள தகவல் தொழில்நுட்பத்தை அனைத்து ஆசிரியர்களும் அறிந்துகொள்ளும் வகையிலும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.

அதன்படி, நேற்று இந்தப் பயிற்சி ஆன்லைன் மூலம் தொடங்கியது. சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்பயிற்சியை தொடங்கிவைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

பள்ளிக்கல்வித் துறையில் தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை அனைத்து ஆசிரியர்களும் தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் அவர்களை செயல்படவைப்பதற்காக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கொரோனா காரணமாக தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதுவரை 2 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில் இருந்து மட்டும் 75 ஆயிரத்து 725 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்பித்தல் என்பது சவாலாக உள்ளது. இதை சுலபமாக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம்.



கொரோனா காரணமாக உருவாக்கப்படும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் புதுமையாகத்தான் இருக்கிறது.

தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன்மூலம் கற்பித்தல் முறையை எப்படி மேம்படுத்துவது என்பதைத்தான் பார்த்து வருகிறோம்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான செல்போன், இன்டர்நெட் வசதி போன்றவை குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்.

பொதுத்தேர்வை நடத்துவதை பொறுத்தவரை இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன. அதற்குள் தற்போதுள்ள முழுமையான பாடத்திட்டத்துக்கு மாணவர்கள் தயாராகிவிடுவார்களா என்பதை பார்க்க வேண்டியுள்ளது.

தற்போது உள்ள பாடத்திட்டத்தில் 60 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து பொதுத்தேர்வை நடத்தலாமா என்று விவாதித்து வருகிறோம். எல்.கே.ஜி., யூ.கே.ஜி. படிக்காமல் குறிப்பிட்ட வயதை அடைந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகள் மறுக்கக்கூடாது. அப்படி மறுப்பதற்கு எந்த விதியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News