செய்திகள்

கைலாசநாதர் கோவிலில் ஐம்பொன் நடராஜர் சிலை கடத்தல் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் விசாரணை

Published On 2018-05-24 11:28 GMT   |   Update On 2018-05-24 11:28 GMT
தஞ்சாவூரில் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலில் இருந்து 44 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகள் குறித்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேரில் விசாரணை நடத்தினார்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்து கோவில்கள் பல உள்ளன. இங்கு பல நூற்றாண்டுகளை கடந்த ஐம்பொன் சாமி சிலைகள் உள்ளன. இவைகளுக்கு வெளி நாட்டில் நல்ல விலை கிடைப்பதால் சிலை கடத்தல் கும்பல் அதிகாரிகளின் உதவியுடன் போலி சிலைகளை வைத்து விட்டு பழமையான சிலைகளை கடத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சில சிலை கடத்தலை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த 1974-ம் ஆண்டு கொல்கத்தா விமான நிலையத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட 4 நடராஜர் சிலைகள் பிடிபட்டது. அதில் ஒரு சிலை தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கைலாசநாதர் கோவிலில் உள்ள சிலைகள் குறித்து உதவி ஆணையர் பரணிதரன், கோவில் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் சரிபார்த்துள்ளனர். அப்போது ஒரு நடராஜர் சிலை போலியானது என்று கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரணை செய்ததில் 44 ஆண்டுகளுக்கு முன்பு ஒரிஜினல் சிலையை மாற்றி மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இக்கோவிலில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி கோவில் ஆய்வாளர் சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் நேற்று கைலாச நாதர் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சிலைகள் குறித்து 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறியதாவது:-

கைலாசநாதர் கோவிலில் இருந்து ஐம்பொன் நடராஜர் சிலையை கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றி உள்ளனர். அந்த சிலையில் திருவாச்சி உடைத்து காணப்படும். அந்த சிலை தான் கொல்கத்தா விமான நிலையத்தில் பிடிப்பட்டு தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News