செய்திகள்

32 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் விரைவில் ஷேர் கார் வசதி

Published On 2019-05-15 08:52 GMT   |   Update On 2019-05-15 08:52 GMT
32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் புதிய ஷேர் கார் வசதியை அனைத்து பயணிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் செய்து வருகிறது.

மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகளை பஸ் நிலையம், புறநகர் மின்சார ரெயில் நிலையம், பறக்கும் ரெயில் நிலையங்களோடு இணைக்கும் வகையில் ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதியினை ஒரு சில நிலையங்களில் அறிமுகம் செய்தது.

கோயம்பேடு, ஆலந்தூர், வடபழனி, ஏ.ஜி-டி.எம்.எஸ்., அண்ணாநகர் கிழக்கு ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் கார் வசதி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை நிலையங்களில் ஷேர் ஆட்டோ வசதி நடைமுறையில் உள்ளது.

இது தவிர பெடல் சைக்கிள் வசதி, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு நிலையங்களிலும் ஆலந்தூர், கிண்டி நிலையங்களில் எலக்ட்ரானிக் பைக் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சைக்கிள் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகளை ஊக்குவிக்கவும், அதிகப்படுத்தவும் இன்னும் வசதிகளை விரிவாக்கம் செய்து வருகிறது.

தற்போது 5 நிலையங்களில் மட்டும் ஷேர் கார் வசதி உள்ளது. இந்த வசதியை 32 நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்துக்குள் ஷேர் கார் வசதி அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் கிடைக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது.

ஷேர் கார் வசதியை பெற தனியாக ஆப் வசதியை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் இந்த வசதியை பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. இது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

ஒவ்வொரு நிலையத்திலும் 2 முதல் 6 கார்கள் வரை தேவையை பொறுத்து நிறுத்தப்படும். மீனம்பாக்கம், நங்கநல்லூர் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் 2 கார்களும், சென்ட்ரல், ஆலந்தூர் நிலையங்களில் 4 அல்லது 6 கார் வரை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகளின் தேவையை பொறுத்து இது அதிகரிக்கப்படும். குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் ஷேர் கார் செல்லக்கூடிய வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ஆக உள்ளது. புதிய ஷேர் கார் வசதியை அனைத்து பயணிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ஸ்மால் பஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது. 16 ரெயில் நிலையங்களில் தற்போது ஸ்மால் பஸ் வசதி உள்ளது. அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மாநகர போக்குவரத்து கழகத்துடன் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பேசி வருகிறது.

Tags:    

Similar News