ஆன்மிகம்
சித்தி விநாயகர்

திருமண தடை, ராகு-கேது தோஷம் நிவர்த்தி செய்யும் தலம்

Published On 2021-05-13 08:16 GMT   |   Update On 2021-05-13 08:16 GMT
தஞ்சை ஜோதி நகரில் அமைந்து உள்ள சித்தி விநாயகர் கோவிலில் திருமண தடை, ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
தஞ்சை-நாகை சாலையில் உள்ள ஜோதி நகரில் அமைந்து உள்ளது சித்தி விநாயகர் கோவில். கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி கட்டப்பட்ட இந்த கோவிலில் கடந்த 2004, 2016-ம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடந்து உள்ளது.

கந்த சஷ்டி விழாவுக்கு அடுத்த நாள் இங்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத பெண்கள் மாலை எடுத்து வந்து சுவாமிக்கு செலுத்துவார்கள். பின்னர் அந்த மாலை திருமணம் வேண்டி வந்த பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும்.

இவ்வாறு திருமண தடையை நீக்குவதற்காக வந்த பெண்ணுக்கு அடுத்த கந்த சஷ்டி திருவிழாவிற்குள் திருமணம் நடைபெறும் என்பது இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கோவிலை திருமண தடை நீக்கும் கோவிலாக கருதி வழிபட்டு வருகிறார்கள்.

இந்த கோவிலில் காளிங்க நர்த்தனார்(கிருஷ்ணர்) பாம்பின் மீது அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படும். அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் குழந்தை பேறு இல்லாதவர்கள் கலந்து கொண்டு குழந்தைப்பேறு வேண்டி வழிபடுவது வழக்கம்.

இந்த கோவிலின் நுழைவு வாயிலில் இடதுபுறம் அரச மரம் மற்றும் வேப்ப மரத்தடியில் விநாயகர் மற்றும் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் வேறு எந்த திருத்தலத்திலும் இதுபோன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லை. இங்கு ராகு-கேது தோஷம் நிவர்த்தி பெற ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
Tags:    

Similar News