செய்திகள்
அமராவதி சர்க்கரை ஆலை.

விவசாயிகளுக்கு ரூ.11 கோடி நிலுவைத்தொகை பட்டுவாடா

Published On 2021-09-08 07:42 GMT   |   Update On 2021-09-08 07:42 GMT
கரும்புக்கிரைய நிலுவைத் தொகை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் படி ஆலை நிர்வாகத்தை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
உடுமலை:-

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதகாலத்தை கரும்பு அரவை பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆலை அரவைக்குத் தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி ஆகிய தாலுகாக்களில் கரும்பு விவசாயிகளிடமிருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்க்காரப்பட்டி, பழனி ஆகிய இடங்களில் உள்ள கோட்டகரும்பு அலுவலகங்கள் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்து கொள்முதல் செய்யப்பட்டு, அரவை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஆலை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.இதனால் ஆலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி முதல் ஜூலை மாதம் 1-ந்தேதி அதிகாலை வரை கொள்முதல் செய்யப்பட்ட கரும்பிற்கான கிரைய தொகை ரூ.11 கோடியே 43 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையாக இருந்துவந்தது. 

இந்தநிலையில் இடையில் நிலுவைத் தொகையில் ரூ.57லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 736 விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.10 கோடியே 86 லட்சம் வழங்கப்படாமல் நிலுவையாக இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் அடுத்ததாக விவசாயப்பணிகளுக்கு பணம் இல்லாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 

அவர்கள் கரும்புக்கிரைய நிலுவைத் தொகை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் படி ஆலை நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அரசு இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழி வகைக்கடனாக ரூ.10 கோடியே 86 லட்சம் வழங்கி யுள்ளது. 

இதைத்தொடர்ந்து 736 விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவை தொகை ரூ.10கோடியே 86 லட்சம்  அந்தந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. 

இதன் மூலம் 2020 - 2021-ம் ஆண்டு அரவைப்பருவத்தில் ஆலைக்கு கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்பிற்கு அரசு நிர்ணயித்திருந்த கரும்பு கிரைய தொகை நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News