செய்திகள்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

25 வினாடிகளில் ரிசல்ட்... அதிவிரைவு கொரோனா பரிசோதனையை அறிமுகம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Published On 2021-05-14 06:59 GMT   |   Update On 2021-05-14 06:59 GMT
அதிவிரைவு பரிசோதனையை சமீபத்தில் ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறி உள்ளது.
லண்டன்:

பிரிட்டிஷ் ஏர்வேஸ் வரும் திங்கட்கிழமை முதல் புதிய வழித்தடங்களில் உலகளாவிய விமானங்களை இயக்க உள்ளது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், இதற்கான முன்னேற்பாடுகளை செய்கிறது. குறிப்பாக, ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக அதிவிரைவு பரிசோதனை முறையை அறிமுகம் செய்ய உள்ளது. பரிசோதனை முடிவு 25 வினாடிகளில் தெரியவரும்.

அதிவேகமாக கொரோனா வைரஸ் சோதனை செய்யும் உலகின் முதல் விமான நிறுவனம் நாங்கள் தான் என பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. தங்கள் கனவுத் திட்டமான இந்த பரிசோதனை திட்டத்தை ‘கேம் சேஞ்சர்’ என்றும் கூறியுள்ளது. மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான கேனரி குளோபாம் நிறுவனத்துடன் இணைந்து இந்த பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.



முதலில் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பைலட்டுகள் ஆகியோருக்கு பெலிகன் கோவிட் ஆன்டிஜென் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சென்சார் யூனிட்டில் பயனர்கள் தங்கள் உமிழ்நீரின் மாதிரியை வைக்கவேண்டும். பின்னர் சென்சார் யூனிட்டானது ஸ்மார்ட்போன் போன்ற புளூடூத் வசதி கொண்ட மின்னணு சாதனத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் ரீடரில் செருகப்படுகிறது. இதன்மூலம் உடனடியாக சோதனை முடிவுகள் கிடைக்கும். 

இந்த சோதனை முடிவுகளை, அவர்களின் நிலையான பரிசோதனை முடிவுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்படும். பின்னர் படிப்படியாக மற்ற ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த பரிசோதனையை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சோதனை முடிவு 25 வினாடிகளுக்குள் ஒரு ஆப் மூலம் கிடைக்கும் என்றும், கொரோனா வைரஸ் உள்ளவர்களில் 98 சதவீதத்தினரையும், கொரோனா பாதிப்பு இல்லாதவர்களில் 100 சதவீதத்தினரையும் சரியாக அடையாளம் காணும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனையை சமீபத்தில் ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அமெரிக்காவில் பரிசீலனையில் உள்ளது என்றும் கூறி உள்ளது.

டெல்டா, விர்ஜின், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ப்ளூ விமான நிறுவன உரிமையாளர்களுடன் இணைந்து பிரிட்டன் ஏர்வேஸ் சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு கடிதம் எழுதியது. அதில், பொருளாதாரத்தை பாதுகாக்கவும், ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்திருக்கும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கவும், அட்லாண்டிக் வழித்தடத்தை அவசரமாக மீண்டும் திறக்கும்படி கேட்டுக்கொண்டது. 
Tags:    

Similar News