வழிபாடு
திருஉத்தரகோசமங்கை

திருஉத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடு தீவிரம்

Published On 2021-12-16 05:26 GMT   |   Update On 2021-12-16 05:26 GMT
வருடத்திற்கு ஒரு முறை சந்தனம் களையும் விழாவின்போது மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் 19-ந்தேதி காலை 9 மணிக்கு களையப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
திருஉத்தரகோச மங்கை மங்களநாதசுவாமி கோவிலில் சிறப்பு வாய்ந்த மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்த கோவிலில் வரும் 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

வருடத்திற்கு ஒரு முறை சந்தனம் களையும் விழாவின்போது மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் 19-ந்தேதி காலை 9 மணிக்கு களையப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மறுநாள்(20-ந்தேதி) அதிகாலை சிலை மீது மீண்டும் சந்தனம் பூசப்படும்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் திருஉத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவிற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோவில் வளாகத்தில் கூட்ட நேரிசல் ஏற்படாத வகையில் போதிய பேரிகாட் தடுப்புகள் அமைத்திடவும், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும், குப்பைகள் தேங்காத வகையில் சுற்றுப்புற சுகாதார தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதுவாக தயார் நிலையில் மருத்துவக் குழுக்கள் அமைத்திடவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடவும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News