செய்திகள்
பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை: டெல்லி ‘எய்ம்ஸ்’ இயக்குனர் கருத்து

Published On 2021-09-28 02:21 GMT   |   Update On 2021-09-28 02:21 GMT
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த குழந்தைகள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடலாம்.
புதுடெல்லி :

கொரோனா தடுப்பு முயற்சியாக 2 டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் தடுப்பூசியின் செயல்திறன் நாளடைவில் குறைந்து விடுவதால், 3-வது தவணையாக, பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும் என்று டாக்டர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடையே ஒரு கருத்து எழுந்துள்ளது.

அமெரிக்காவில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இந்த பேச்சு மறுபடியும் எழுந்துள்ளது.

இந்தநிலையில், டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனை நிரூபிக்கும் அளவுக்கு போதிய விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் இல்லை. எனவே, பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை.

இப்போது, தகுதியுள்ள அனைவருக்கும் 2 டோஸ் முழுமையாக போடுவதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் பூஸ்டர் தடுப்பூசியை போட ஆரம்பித்தால், தகுதியுள்ள ஒரு சிலருக்கு முதல் டோஸ் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசியும் தேவையற்றது. அவர்களுக்கு நோய் தீவிரம் அடைவதும், மரணம் ஏற்படுவதும் அலட்சியப்படுத்தக்கூடிய அளவில்தான் இருக்கிறது. எனவே, அதிக ஆபத்து நிறைந்த பிரிவினர் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும்.

அதே சமயத்தில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த குழந்தைகள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடலாம்.

2 வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து போடுவது பற்றி வேலூர் சி.எம்.சி.யில் ஆய்வு நடந்து வருகிறது. அது நல்ல யோசனைதான். பிற்காலத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், அந்த சூழ்நிலையை சமாளிக்க பயன்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News