தொழில்நுட்பம்

இனி ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக் இருக்காது

Published On 2019-06-07 09:35 GMT   |   Update On 2019-06-07 09:35 GMT
ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களில் இனி ஃபேஸ்புக் நிறுவன செயலிகள் இருக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களில் இனி ஃபேஸ்புக் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஹூவாய் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த முடியும். இந்த செயலிகளுக்கான அப்டேட்களும் தொடர்ந்து வழங்கப்படும்.

எனினும், இனி வெளியாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்று பிரபலமாக இருக்கும் செயலிகளை தங்களது சாதனங்களில் பிரீ-இன்ஸ்டால் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.



பல்வேறு நாடுகளில் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களில் ட்விட்டர் மற்றும் புக்கிங்.காம் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்கப்படுகின்றன. இது குறித்து ட்விட்டர் மற்றும் புக்கிங் ஹோல்டிங்ஸ் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

ஃபேஸ்புக்கின் புதிய முடிவு ஹூவாய் நிறுவன விற்பனைக்கு பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஹூவாய் நிறுவன சாதனங்கள் அதிகளவு விற்பனையை பதிவு செய்த நிலையில், ஃபேஸ்புக்கின் புதிய அறிவிப்பு அந்நிறுவன வியாபாரத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவன நடவடிக்கைக்கு ஹூவாய் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News