செய்திகள்
தமிழக அரசு

மஞ்சளாறு, சோத்துப்பாக்கம் அணைகளில் இருந்து 15-ந்தேதி தண்ணீர் திறப்பு: தமிழக அரசு

Published On 2021-10-12 08:52 GMT   |   Update On 2021-10-12 08:52 GMT
தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு, சோத்துப்பாக்கம் அணைகளில் இருந்து 15-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து 15-ந் தேதி முதல் 152 நாட்களுக்கு மொத்தம் 937.41 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர் ஆக மொத்தம் 5259 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போகமாக 1825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து அக்டோபர் 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந் தேதி வரை முதல் 62 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கனஅடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 2865 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News