தொழில்நுட்பம்
நோக்கியா

நிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் நோக்கியா

Published On 2020-10-20 06:36 GMT   |   Update On 2020-10-20 06:36 GMT
நிலவின் மேற்பரப்பில் 4ஜி நெட்வொர்க்கை கட்டமைக்க நோக்கியா நிறுவனத்தை நாசா தேர்வு செய்து உள்ளது.

நிலவில் 4ஜி செல்லுலார் நெட்வொர்க் வசதியை கட்டமைக்க நாசா நோக்கியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் இதற்கான பணிகளை துவங்க நோக்கியா நிறுவனத்திற்கு நாசா சார்பில் 1.4 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

நிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்க மொத்தத்தில் 37 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் முதல் முறையாக எல்டிஇ \ 4ஜி செல்லுலார் வசதி கட்டமைக்கப்பட இருக்கிறது. 

இதற்காக நோக்கியா சார்பில் உருவாக்கப்படும் தொழில்நுட்பம், நிலவின் மேற்பரப்பில் தொலைதூர தகவல் பரிமாற்றங்களை அதிவேகமாக மேற்கொள்ள வழி செய்யும். இதுதவிர தற்சமயம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை விட சீரான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் வழி செய்யும்.



நாசா இலக்கின் படி 2028 ஆம் ஆண்டு வாக்கில் நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள் பணிகளை மேற்கொள்ள செய்யும் திட்டத்தை நிறைவேற்ற விரைவில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என நாசா அதிகாரி ஜிம் பிரைட்ஸ்டைன் தெரிவித்து இருக்கிறார்.

நோக்கியாவின் ஆராய்ச்சி பிரிவான பெல் லேப்ஸ், லூனார் ரோவர்களை வயர்லெஸ் முறையில் இயக்குவது, நேவிகேஷன் மற்றும் வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்ட வசதிகளை வழங்க பணியாற்றி வருவதாக தெரிவித்து உள்ளது.

நாசாவின் திட்டத்தின் படி நோக்கியா மட்டுமின்றி பல்வேறு இதர தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற பணிகளை துவங்க இருக்கின்றன. இது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

Tags:    

Similar News