செய்திகள்
கோப்புபடம்

வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க கோரி திருப்பூரில் நாளை விவசாயிகள் போராட்டம்

Published On 2021-09-24 05:22 GMT   |   Update On 2021-09-24 05:22 GMT
ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய 750 கிலோ விதை வெங்காயம் வாங்க வேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் பயிரை வளர்க்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை விவசாயிகளிடம் வியாபாரிகள் கிலோ ரூ.8க்கு கொள்முதல் செய்வதால் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

விதை வெங்காயம் கிலோ ரூ. 75 க்கு வாங்கி விதைத்தோம். தொடர்ந்து 85 நாட்கள் தண்ணீர் விட்டும், களைபறித்தும் பராமரித்து வெங்காயம் அறுவடைக்கு வந்துவிட்டது. இதுவரை ஓரளவு விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக, விவசாயிகள் புலம்புகின்றனர்.

ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய 750 கிலோ விதை வெங்காயம் வாங்க வேண்டும். தொடர்ந்து, 90 நாட்கள் பயிரை வளர்க்க வேண்டும். தொழிலாளர் கூலி பெரும் செலவாக இருக்கிறது. 

வழக்கமாக 20 ரூபாய் வரை விலைக்கு வாங்கப்பட்ட நிலைமாறி கிலோ ரூ.8க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு ஐந்து டன் வெங்காயம் உற்பத்தியானாலும் ரூ. 80 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வியாபாரிகள் கிலோ ரூ.8க்கு வாங்கிச்சென்று, மக்களுக்கு ரூ.20க்கு விற்கின்றனர். வெங்காயம் 20 கிலோ சிப்பம் ரூ.180 முதல் 250 வரை மட்டுமே விற்கப்படுகிறது. 

தமிழக அரசு, வெங்காயத்துக்கு சரியான விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்:

வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கிலோவுக்கு 40 ரூபாய் விலை கிடைக்க வேண்டும். வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க கோரி  நாளை 25-ந்தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Tags:    

Similar News