செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, தங்கத்தை படத்தில் காணலாம்.

சசிகலாவின் உறவினரிடமிருந்து துப்பாக்கி, தங்கம் பறிமுதல் - சர்வதேச அளவிலான தொடர்பு குறித்து ஆந்திர போலீசார் விசாரணை

Published On 2021-01-10 10:19 GMT   |   Update On 2021-01-10 10:19 GMT
செம்மரக்கடத்தலில் கைதான சசிகலாவின் உறவினரிடமிருந்து துப்பாக்கி, தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சர்வதேச அளவிலான தொடர்பு குறித்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

செம்மரக்கடத்தல் தொர்பான வழக்கில் சசிகலாவின் உறவினரும் இளவரசியின் சம்பந்தியுமான பாஸ்கரனை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

செம்மரக் கடத்தல் தொடர்பாக பாஸ்கரன் மீது ஆந்திராவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. செம்மரங்களை  திருட்டுத்தனமாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவதாக ஆந்திராவில் அவர்மீது  பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  வருவாய் புலனாய்வு பிரிவினரும் பாஸ்கரன் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்,  செம்மரக் கட்டைகள் கடத்தியதாக ஆந்திரா போலீசார் பாஸ்கரனை கைது செய்துள்ளனர். 

இது தொடர்பாக கடப்பா போலீஸ் எஸ்.பி. தேவபிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடப்பா மாவட்ட போலீசார் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 கார்களை மடக்கி சோதனை செய்ததில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சர்வதேச அளவில் செம்மரக் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்த தமிழகத்தில் சசிகலாவின் உறவினரான பாஸ்கரன், கடப்பாவை சேர்ந்த ராகவேந்திரா, சித்தூர் பீலேரை சேர்ந்த 2 பேர், நெல்லூரை சேர்ந்த 3 பேர், தமிழகத்தை சேர்ந்த 2 கூலித் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் கடத்தல்காரர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 55 செம்மரக்கட்டைகள், கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 2 கார்கள், 300 கிராம் தங்கம், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடப்பாவை சேர்ந்த ராகவேந்திராவுடன் இணைந்து தமிழகத்தில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து கடப்பா மாவட்டத்தில் உள்ள ராயச்சோட்டி, சிட்வெல், அட்லூரு ஆகிய வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்டி, தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான பாஸ்கரனிடம் சர்வதேச அளவிலான தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News