செய்திகள்
கோப்பு படம்.

சென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு

Published On 2020-09-21 08:40 GMT   |   Update On 2020-09-21 08:40 GMT
சென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

சென்னை:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவ தொடங்கியது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 15 மண்டலங்களிலும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று உள்ள பகுதிகளை கண்டறிந்து அவற்றை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவித்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி செய்து வருகிறது.

தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் மாநகராட்சி நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் கட்டுக்குள் வந்தது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.

இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கோவில்கள் திறக்கப்பட்டன. மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது. சென்னையிலும் மாநகர பஸ்கள் ஓடின. மெட்ரோ ரெயிலும் இயக்கப்பட்டது.

ஆனாலும் கடந்த வாரம் வரை கொரோனா பாதிப்பு சென்னையில் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்தது. கடந்த வாரம் கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். மற்ற அனைத்து மண்டலங்களிலும் 1000-க்கும் கீழேயே பாதிப்பு இருந்தது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் கொரோனா நோய் தொற்றை கண்டறியும் வகையில் வாரத்துக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள 11 மண்டலங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சதவீதம் அதிகரித்து உள்ளது.

இதில் ஆலந்தூர் மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.3 சதவீதம் அதிகரித்து உள்ளது. திருவொற்றியூரில் 4.8 சதவீதமும், மணலியில் 4.7 சதவீதமும், தண்டையார் பேட்டையில் 3.4 சதவீதமும், மாதவரத்தில் 2.7 சதவீதமும், அண்ணாநகரில் 2.7 சதவீதமும், திரு.வி.க.நகரில் 2.6 சதவீதமும், அடையாறில் 1.4 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 0.9 சதவீதமும், ராயபுரத்தில் 0.8 சதவீதமும், பெருங்குடியில் 0.6 சதவீதமும் நோய் தொற்று அதிகரித்து உள்ளது.

ஆனால் மற்ற 4 மண்டலங்களில் நோய் தொற்று குறைந்துள்ளது. வளசரவாக்கத்தில் 4.7 சதவீதம் நோய்தொற்று குறைந்துள்ளது. சோழிங்கநல்லூரில் 4.1 சதவீதமும், தேனாம்பேட்டையில் 1.8 சதவீதமும், அம்பத்தூரில் 1.1 சதவீதமும் நோய்தொற்று குறைந்துள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்தொற்று அதிகரிப்பை பொறுத்தவரையில் கடந்த வாரம் 0.5 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. இந்த வாரம் அது 0.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்னையில் இறப்பு விகிதம் 1.97 சதவீதமாக குறைந்து உள்ளது.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து உள்ளது. 4 மண்டலங்களில் குறைந்துள்ளது. நாங்கள் நோயை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தளர்வுகளால் கொரோனாவின் தாக்கம் எந்த வகையில் இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

ஒருவருக்கு கொரோனா தொற்றை உறுதி செய்யும் நேரத்தில் அவரை சார்ந்து இருக்கும் 10 பேருக்கு நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். பொது போக்குவரத்து தொடங்கி 21 நாட்கள் ஆன நிலையிலும் பெரும்பாலான இடங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை” என்றார்.

Tags:    

Similar News