லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் கால்களின் உயர மாறுபாடு ஏன்?

குழந்தைகளின் கால்களின் உயர மாறுபாடு ஏன்?

Published On 2021-11-19 04:08 GMT   |   Update On 2021-11-19 04:08 GMT
குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்திட வேண்டாம்.
மனிதனின் இருகால்களும் ஒரே உயரத்தில் ஒன்று போலவே தோற்றமளிப்பது இயல்பானது. ஆனால், சிலருக்கு 2 கால்களில் ஒன்று மட்டும் உயரம் குறைந்தோ அல்லது வளைந்தோ இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. வளரும் பருவத்தில் குழந்தைகளின் தொடை எலும்பின் மேல் பகுதி அல்லது கீழ்ப்பகுதியில் அடிபட்டு வளர்ச்சி குருத்துகளில் முறிவு ஏற்பட்டிருக்கலாம்.

அடிபட்டதும் சில சமயம் இதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். முறையான வைத்தியம் கிடைக்காமல் இந்த பகுதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் வளரும் குருத்துகள் தாறுமாறாக கூடிவிடும். இதனால் அந்த காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ முறுக்கியபடியோ வளர வாய்ப்பு உண்டாகும்.

ஒரு கால் உயரம் குறைவாகவோ, வளைவாகவோ அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு அதுவும் மூன்று மாதங்களுக்குள் இருப்பவர்களுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் தொடை எலும்பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்துப் பகுதிகளும் அழிந்தே போய்விடும்.

இது போன்ற வேதனைகள் கால் மூட்டு சார்ந்த குருத்து மற்றும் கணுக்கால் மூட்டு சார்ந்த குருத்தெலும்பு பகுதிகளிலும் உண்டாகி, அந்த கால் உயரம் குறைவாகவும், சிறுத்தும் போவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

'செப்டிக் ஆர்த்ரைட்டிஸ்' எனும் கொடிய சீழ்பிடிப்பு நோயினால் தன் தனித்தன்மையை, வடிவத்தை இழந்த தொடை எலும்புகளும் உண்டு. ஆனால், வளர்ந்து வரும் நமது நாட்டில் இது போன்ற நோய்கள் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.

குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ தொடைப் பகுதியிலோ அல்லது காலிலோ வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர், அதை அலட்சியப்படுத்திட வேண்டாம். உடனே தகுந்த டாக்டரிடம் ஆலோசனை செய்வது கட்டாயம்.

கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான். இப்போதெல்லாம் நாடு முழுவதும் நடைபெறும் முகாம் மூலம் போலியோ தடுப்பு மருந்து குழந்தைகள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுவிடுவதால் வருங்காலத்தில் இந்த கொடிய நோய், பெரியம்மை போல மருத்துவ வரலாற்றில் மட்டும் இடம் பெறும் நோயாக மாறிவிடும்.
Tags:    

Similar News