செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த மாதம் இறுதியில் பட்ஜெட் தாக்கல்- மு.க.ஸ்டாலின் துறை வாரியாக ஆய்வு பணிகள் தீவிரம்

Published On 2021-07-13 06:48 GMT   |   Update On 2021-07-13 06:49 GMT
அநேகமாக அடுத்த வாரம் 21-ந்தேதிக்குள் துறை வாரியான ஆய்வு கூட்டங்கள் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: 

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியதும் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

அதன் பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. 22-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன.

கொரோனா விவகாரம், நீட் தேர்வு, டாஸ்மாக் பிரச்சனை, நதி நீர் இணைப்பு, நெல் கொள்முதல், மின்சாரம், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விரிவாக பதில் அளித்தனர். 

இறுதி நாள் அன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார்.

இந்த கூட்டத்தொடரில் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி காலம் நீட்டிப்பு உள்பட பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பட்ஜெட் தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து   
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
, நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் துறை வாரியாக தினமும் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

நெடுஞ்சாலைத் துறை, கூட்டுறவுத் துறை, வணிக வரித்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை, ஊரக தொழில் துறை, போக்குவரத்து துறை, ஆதிதிராவிட நலத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை, உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சம்பந்தமான ஆய்வு கூட்டங்கள் நடத்தி உள்ளார்.

இன்று கைத்தறித்துறை, பால்வளம், பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் ஆய்வு கூட்டங்கள் நடந்து வருகிறது.

இது தவிர மின்சாரம், மது விலக்குத் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட ஒரு சில துறைகளின் ஆய்வு கூட்டங்கள் விரைவில் நடைபெற உள்ளது.

அநேகமாக அடுத்த வாரம் 21-ந்தேதிக்குள் துறை வாரியான ஆய்வு கூட்டங்கள் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்களை அறிவிக்கலாம், புதிய திட்டங்களை அறிவிக்க எவ்வளவு நிதி தேவைப்படும், தற்போது துறையில் நடந்து வரும் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளன. இன்னும் என்னென்ன மக்கள் நலப் பணிகள் செய்யலாம் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசித்து வருகிறார்.

ஒவ்வொரு துறை வாரியாக நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வருகிறது.  ஆய்வு கூட்டங்கள் அனைத்தும் முடிந்த பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை அதிகாரிகள் சந்தித்து பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள் முடிந்ததும் இந்த மாத இறுதியில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்காக 26-ந்தேதிக்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் சட்டசபை கூடும் என தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

Tags:    

Similar News