செய்திகள்
அமைச்சர் ஜெயகுமார்

போலீஸ் அதிகாரி கொலையில் அரசியல் செய்வதா?-மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்

Published On 2020-01-12 10:16 GMT   |   Update On 2020-01-12 10:16 GMT
களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை பற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 8.1.2020 அன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடிபணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவ்வழக்கில், தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, விசாரணை மேற்கொண்டதுடன், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காவல்துறை இயக்குநரே நேரில் சென்றும் விசாரணை மேற்கொண்டார்.

அதுமட்டுமன்றி, 8.1.2020 அன்று இரவு நடந்த இச்சம்பவம் தொடர்பாக மறுநாளே 9.1.2020 அன்று சட்டப் பேரவையிலேயே முதல்-அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், குடும்பத்தாருக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி, மறுநாள் 10.1.2020 அன்று நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் வழங்கியும் உத்தரவிட்டார்.

சம்பவம் குறித்து இரண்டு நாட்களாக ஒரு அனுதாபம் கூடதெரிவிக்காமல், நேரடியாகச் சென்று பெயரளவில்5 லட்சம் ரூபாயை அக்குடும்பத்தினருக்கு வழங்கிவிட்டு, காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை; இதில்தான் தமிழ்நாடு முதலிடம் என்று டுவிட்டரில் பதிவிட்டு, ஒருகாவல் அலுவலரின் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டுள்ளார் தி.மு.க. தலைவர்.


யாருடைய ஆட்சியில் காவல் துறையினருக்கு நல்லது நடக்கிறது என்பதும், யாருடைய ஆட்சியில் காவல் துறையினரை கண்டு கொள்ளவே இல்லை என்பதும், காவல்துறையினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்கு தெரியும், அது பற்றி தி.மு.க. தலைவர் எடுத்துரைக்க வேண்டிய அவசியமே இல்லை.

தி.மு.க. ஆட்சியின்போது காவல் துறையினர் பட்ட இன்னல்களைப் பற்றி பல்வேறு உதாரணங்களை கூறிக்கொண்டேபோகலாம். இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து, தி.மு.க. தலைவர் டுவிட்டரில் இட்டுள்ள பதிவு, மக்கள் சிரிக்கத்தான் வகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News