செய்திகள்
கோப்புபடம்

விதிமீறல் கட்டிடங்களை இடிக்க கோரிக்கை

Published On 2021-07-25 08:13 GMT   |   Update On 2021-07-25 08:13 GMT
விதிமீறிய கட்டிடங்களை இடிக்க நகர் ஊரமைப்பு இயக்ககம் மட்டுமே தனது அதிகாரத்தை செயல்படுத்தி வந்தது.
உடுமலை:

நிலத்தில் லே-அவுட் அமைத்து அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்ககத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறு  விதிகள் பல இருந்தும் அதிகப்படியான இடங்களில் விதிமீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கட்டப்பட்டும் வருகின்றன.

அக்கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் உள்ளாட்சி அமைப்புகள்  ஆர்வம் காட்டாத நிலையில் விதிமீறல் கட்டிடங்களுக்கு எச்சரிக்கை ‘நோட்டீஸ்’ மட்டும் அளிக்கப்படுகிறது.விதிமீறிய கட்டிடங்களை இடிக்க  நகர் ஊரமைப்பு இயக்ககம் மட்டுமே தனது அதிகாரத்தை செயல்படுத்தி வந்தது.

இத்தகைய சூழலில் இப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காணும் வகையில்  விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களை உள்ளாட்சி அமைப்புகளே இடிக்க  நகர் ஊரமைப்புத்துறை ஆணையகத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் உடுமலை சுற்றுப்பகுதியில்  விதிமீறி எழுப்பப்படும் கட்டிடங்கள் மீதான நடவடிக்கையில்  உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு முடங்கி கிடக்கிறது.இதுகுறித்து  தன்னார்வலர்கள் கூறியதாவது:-

உத்தரவை பின்பற்றி  எந்தவொரு நடவடிக்கையும் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்படுவதில்லை. பல இடங்களில் விதிமீறிய கட்டிடங்களின் கட்டுமானம் அதிகரிக்கிறது.

நீர்நிலை புறம்போக்குகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. விதிமீறிய கட்டிடங்கள் குறித்து முறையாக சர்வே நடத்தி  அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு  அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News